
ஆர். சண்முகசுந்தரம் (ஆர். ஷண்முகசுந்தரம்) (1917-1977) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள் தமிழிலக்கியத்தில் யதார்த்தவாத அழகியல் மரபை உருவாக்கிய முன்னோடி படைப்புகளாக கருதப்படுகின்றன.
ஆர். சண்முகசுந்தரம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இந்த கிராமம் திருப்பூர் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இவரது தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.
திருஞானசம்பந்தம்- ஆர்.சண்முகசுந்தரம் இருவரும் ஆர்.கே.சண்முகம் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வசந்தம் என்னும் சிற்றிதழை தொடங்கினார்கள். சில ஆண்டுக்காலம் வெளிவந்த வசந்தம் பின்னர் நிறுத்தப்பட்டது. வசந்தம் இதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இருந்தார்.
ஆர். சண்முகசுந்தரத்தின் முதல் சிறுகதையான "பாறையருகே" பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த மணிக்கொடி இதழில் 1937-ல் வெளியானது. "நந்தா விளக்கு" என்ற சிறுகதையும் மணிக்கொடி இதழில் வெளிவந்தது.
நாவல்கள்
ஆர். சண்முகசுந்தரம் 1939-ல் நாகம்மாள் என்னும் முதல் நாவலை எழுதினார். அந்நாவல் 1942-ல் தான் புதுமலர் வெளியீடாக வெளிவந்தது. ஆர்.சண்முகசுந்தரம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். 'சட்டி சுட்டது’ இவரது சிறந்த நாவல்களில் ஒன்று. இதே ஆண்டில் வெளிவந்த அழியாக்கோலம் நாவலும் இலக்கிய கவனம் பெற்றது.
சிறுவர் இலக்கியம்
ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய "ரோஜா ராணி" எனும் சிறுவர் நூல் 1968-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒன்பது சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் அது. ஆர். சண்முகசுந்தரம் ஆலோலம் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகள் 'சுதேசமித்திர’னிலும், 'நவசக்தி’யிலும் எழுதினார்.
மொழியாக்கப் படைப்புகள்
ஆர். சண்முகசுந்தரம் சரத்சந்திரர் எழுதிய 'அசலா’ என்ற நாவலை வங்கத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார். ஆனால் அது நூல் வடிவில் வெளிவருவதற்கு முன்பே அடுத்து ஆர். சண்முகசுந்தரம் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற நாவல் ஆனந்த விகடனில் அதன் ஆசிரியர் கல்கியால் வெளியிடப்பட்டது. சக்தி வை. கோவிந்தன் தன் சக்தி பதிப்பகம் வழியாக வெளியிட்ட ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்த அசலா பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பானர்ஜி, தாகூரின் சிறுகதைகள் ஆகியவற்றை ஆர். சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆர். சண்முகசுந்தரம் சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆர்.சண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்த விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ’பதேர் பாஞ்சாலி’ தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய நாவல்.