
எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் என பல திறக்குகளிலும் இயங்கி வருபவர் சி.ஆர். ரவீந்திரன்.
கல்லூரி மாணவனாக இருக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டார். முதல் சிறுகதை, 'இரவின் பூக்கள்' இலங்கை 'வீரகேசரி' நாளிதழின் வாரமலரில் பிரசுரமானது. தொடர்ந்து தீபம், கணையாழி உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி வந்தவர், தனக்குப் பிடித்த படைப்புகள் சிலவற்றை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டார். இலங்கையிலிருந்து வெளியான விவேகி, பூரணி, அஞ்சலி, மல்லிகை போன்ற இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புக் கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகின.
சில வருடங்கள் டியூட்டராக அரசினர் கலைக்கல்லூரியில் பணியாற்றினார். பின் 'மேம்பாலம்', 'விழிப்பு' உள்ளிட்ட இதழ்களில் பணி புரிந்தார். சக்தி சர்க்கரை ஆலை வெளியிட்ட செய்திமடலில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. நிருபர், அச்சகர், பத்திரிகை ஆசிரியர் என்று பல பொறுப்புக்களில் இயங்கினார். 'ஆல்', விழிப்பு' போன்ற சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார். 'பழைய வானத்தின் கீழே' என்பது இவருடைய முதல் நாவல். முதல் சிறுகதைத் தொகுப்பு 'ரிவோல்ட்' 1988ல் வெளியானது. அதே ஆண்டில் 'பசியின் நிறம்' சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் இவரது சிறுகதை, கட்டுரைகள் வெளியாகின.
இவரது படைப்புகளில் 'ஈரம் கசிந்த நிலம்' என்ற நாவல் முக்கியமானதும் பலரால் பாராட்டப்பட்டதும் ஆகும். கொங்குப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை விரிவாகப் பதிவு செய்த நாவல் என்று இதனைச் சொல்லலாம். விவசாயச் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை, நிலத்திற்காகவும், குத்தகைக்காகவும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை, சந்திக்கும் அவமானங்களை, அவல வாழ்க்கையை விரிவாக இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார் ரவீந்திரன். இப்படைப்பிற்காக இவருக்கு 'பாரதிய பாஷா பரிஷத்' விருது கிடைத்தது. இதே படைப்பிற்குக் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருதும், தங்கம்மாள் நினைவுப் பரிசும் கிடைத்தன.
இவர் எழுதிய, 'ஓடைப்புல்' நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது. 1960ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அதை எழுதியிருந்தார். தன்னை முன் நிறுத்திச் செயல்படாத இலக்கியவாதியான ரவீந்திரன், நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இதுவரை 50க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதமியின் மாநிலக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பங்களிப்புச் செய்துவரும் ரவீந்திரனை 'சங்கமம்' கருத்துப் பரிமாற்றக் களம் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்துள்ளது.